குமாரபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

குமாரபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

in News / Local

குமாரபுரம் அருகே செம்பருத்திவிளை ஞாறாவிளை பகுதியை சேர்ந்தவர் மத்தியாஸ் (வயது 72). இவருடைய மனைவி சரோஜினி பாய்(71). இவர்கள் 2 பேரும் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள். இவர்களுடைய மகன்கள் சத்திய ஜெபஜெனில் (37), ஜெபின் ஜோயல். இவர்கள் 2 பேரும் திருமணம் முடிந்து கோவையில் வசித்து வருகிறார்கள். சத்திய ஜெபஜெனில் காண்டிராக்டராகவும், ஜெபின்ஜோயல் ஐ.டி.நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்கள்.

இதனால், ஆசிரியர் தம்பதி ஞாறாவிளையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த மாதம் சரோஜினிபாய்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிகிச்சைக்காக தம்பதி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கோவையில் உள்ள சத்திய ஜெபஜெனில் வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை மத்தியாஸ் வீட்டின் அருகில் வசிக்கும் பெண் குடிநீர் எடுக்க சென்றார். அப்போது, மத்தியாசின் காம்பவுண்டு கதவு பூட்டப்பட்டும், வீட்டின் கதவு திறந்து இருப்பதையும் கண்டு சந்தேகமடைந்தார். உடனே, இதுபற்றி மத்தியாசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த மத்தியாசின் 2-வது மகன் ஜெபின் ஜோயல் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

மேலும், அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து ஜெபின்ஜோயல் கொற்றிகோடு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கடந்த மாதம் அதே பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. இதனை ஆசிரியர் தம்பதி பார்த்துள்ளனர்.

இதனால் உஷாரான தம்பதி, ஊருக்கு செல்லும் போது பெரும்பாலான நகைகளை தங்களுடன் எடுத்து கொண்டு சென்று விட்டனர். இதனால் கொள்ளையர்களிடம் சிக்காமல் அந்த நகைகள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top