பிரதமர் மோடி வருகைக்கு கருப்பு கொடி போராட்டம் - வைகோ உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கைது!

பிரதமர் மோடி வருகைக்கு கருப்பு கொடி போராட்டம் - வைகோ உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கைது!

in News / Local

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட போவதாக வைகோ முன்பாகவே அறிவித்து இருந்தார், அதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருப்பு கொடி காட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பு பகுதிக்கு வைகோ வேனில் வந்தார்.

அங்கு ஏற்கனவே நெல்லை, குமரி மாவட்டங்களை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கட்சி கொடி மற்றும் கருப்புக் கொடிகளுடன் திரண்டு நின்றனர். தொண்டர்கள் மத்தியில் வைகோ திறந்த வேனில் நின்றபடி பேசினார். ம.தி.மு.க. தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே பா.ஜனதாவை சேர்ந்த 4 பேர் நின்று கொண்டு மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ம.தி.மு.க. தொண்டர்கள் அந்த 4 பேரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனை அறிந்த பா.ஜ.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் வைகோ போராட்டம் நடந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்படி இருந்தும் பா.ஜனதாவினர் சிலர் வைகோ வேன் மீது கற்களை வீசினர்.

ஆத்திரம் அடைந்த ம.தி.மு.க. தொண்டர்கள், பா.ஜனதாவினரை தாக்க தொடங்கினர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த மோதலால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு திரண்டு நின்ற போலீசார் இரு தரப்பினரையும் விரட்டி அடித்தனர்.

இதற்கிடையே வைகோ, ம.தி.மு.க.வினர் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். கல்வீசிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள், ம.தி.மு.க.வினர் யாரும் எதிர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் அங்கு அமைதி திரும்பியது.

போராட்டம் முடிவில் வைகோ திறந்த வேனில் நின்றபடி, மோடி வருகைக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டார். அதற்கு பதிலடியாக மற்றொரு பகுதியில் திரண்டிருந்த பா.ஜ.க.வினர் காவி பலூன்களை பறக்க விட்டனர். தொடர்ந்து பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்றதாக வைகோ உள்பட 401 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 20 பெண்களும் அடங்குவர். பின்னர் அனைவரையும் பணகுடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோதலில் பா.ஜனதாவை சேர்ந்த தொண்டர்கள் தேரேகால்புதூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 25), திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த சங்கர் (29) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

இதற்கிடையே, கன்னியாகுமரி கொட்டாரத்தில் மோடி வருகைக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக கருப்பு கொடி போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top