அரசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி!

அரசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி!

in News / Local

தக்கலை அருகே முளகுமூடு கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி பத்மா. ராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பத்மா குழித்துறை நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஷாஜூ (வயது 24), டிப்ளமோ முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.

முளகுமூடு வயக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் விஜின் (25). இவர் திருவனந்தபுரத்தில் தங்கி இருந்து கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். ஷாஜூவும், விஜினும் நெருங்கிய நண்பர்கள்.

இந்த நிலையில் விஜின் தனது மற்றொரு நண்பரின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்தார். இதற்கிடையே நேற்று மாலை விஜினும், ஷாஜூவும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லுவிளையில் இருந்து சாமியார்மடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அரசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி!

கல்லுவிளையை அடுத்த பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியை சென்றடைந்த போது, எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி தமிழக அரசு விரைவு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளும், அரசு பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஜினும், ஷாஜூவும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர் . சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தக்கலை போலீசார் அரசு பஸ் டிரைவரான கமுதியை சேர்ந்த மணிவிட்டான் (57) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top