ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் டெம்போ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் (மேற்கு) பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 40), டெம்போ டிரைவர். இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் செண்பகராமன்புதூரில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பஞ்சாயத்து தோட்டம் அருகே சென்ற போது எதிரே பெருமாள்புரம் ரைஸ் மில் தெருவை சேர்ந்த அபி என்ற அபினேஷ் (21) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின.
இதில் ராம்ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த அபினேஷ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் வினிஷ் பாபு, பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ராம்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த ராம்ராஜுக்கு மேகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
0 Comments