லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பனியன் நிறுவன அதிபர் சம்பவ இடத்தில பரிதாப சாவு!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பனியன் நிறுவன அதிபர் சம்பவ இடத்தில பரிதாப சாவு!

in News / Local

திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் சையது பர்கத். இவருடைய மகன் சையது அமருல்லான் ரகில். 35 வயதான இவர் திருப்பூர்-பல்லடம் ரோட்டில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்வதற்காக திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நேற்று காலை சென்றார்.

மோட்டார் சைக்கிள் அன்னூர் ஜெ.ஜெ.நகர் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன லாரி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தது. லாரியை டிரைவர் அய்யனார் என்பவர் ஓட்டினார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் சையது அமருல்லான் ரகில் 10 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிள் தரையில் உரசியபடி சென்றதால் தீப்பொறி கிளம்பியது. அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் நசுங்கி திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் லாரியில் தீ வேகமாக பரவியது. இதில் சையது அமருல்லான் ரகில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அய்யனார் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த விபத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அன்னூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் லாரியில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பகுதியும், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதைத் தொடர்ந்து போலீசார், தீயில் கருகி பலியான சையது அமருல்லான் ரகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக இந்த விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். விபத்தில் உயிரிழந்த சையது அமருளல்லான் ரகிலுக்கு அஷ்மா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top