நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் மாயமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் மீட்டு விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் உடந்தையுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாஞ்சில் முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு முதல் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். அப்போதெல்லாம் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
எப்போதோ நடந்ததாக கூறப்படும் சம்பவத்துக்காக இப்போது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என மனுதாரரின் வக்கீல் வாதாடினார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “சம்பவம் எப்போது நடந்தது என்பது முக்கியமல்ல. சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எனவே போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யலாம்“ என்றார். இதையடுத்து இந்த மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments