நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில்

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில்

in News / Local

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் இயக்கமுடிவு செய்து இருப்பதாக தென்னக ரயில்வே உறுதி அளித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது.கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் தினமும் மாலையில் நாகர்கோவில் வழியாக சென்னைக்கு செல்கிறது. இந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். மேலும் பலர் ரயில்களில் இடம் கிடைக்காமல் பஸ்களில் செல்லும் நிலை இருந்து வருகிறது.

பண்டிகை காலங்களில் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மேலும் வாராந்திர சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது.இருப்பினும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு வரும் பலருக்கு ரயிலில் இடம் கிடைக்காமல் பஸ்களிலும், சிலர் ரயில்களில் உடன் பெட்டிகளிலும் பயணிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயிலை இயக்க வேண்டும் என குமரி மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட வியாபாரிகளும் தங்கள் வியாபார வசதிக்காக சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 2 புதிய ரயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் தென்னக ரயில்வே இயக்க முதன்மை மேலாளர் அனந்தராமனை தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் சூசைராஜ், தலைவர் தேவ் ஆனந்த் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது ஜனவரி மாதம் முதல் சென்னை- நாகர்கோவிலுக்கு புதிய ரயில் இயக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் கல்வி, வேலை, வியாபாரம் சம்பந்தமாக சென்னை வந்து செல்லும் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்ட மக்கள் அதிகமாக பயன்பெறுவார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top