கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் யாரும் முதல்நாள் மனுதாக்கல் செய்யவில்லை!

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் யாரும் முதல்நாள் மனுதாக்கல் செய்யவில்லை!

in News / Local

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கள், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரேவிடம் தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேட்பு மனுக்களை காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

வேட்புமனுவை தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல முடியும். வேட்பு மனுதாக்கலின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். குறிப்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலக வளாகங்களுக்குள் வரும் வாகனங்கள், வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

அதன்படி வேட்பு மனு தாக்கலின்போது கலெக்டர் அலுவலகத்துக்குள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தவும், தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்கள் அதிக அளவில் வராமல் கட்டுப்படுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்பட்டன. அடையாள அட்டையை காட்டியபிறகே, கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூட கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர் அலுவலக வளாக பகுதியிலும், கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியேயும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கினாலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. ஆனால் 8 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி மனுவை வாபஸ் பெற கடைசிநாள். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top