என் இறுதி வரை மட்டுமல்ல என் தலைமுறையும் தி.மு.க தான் – துரைமுருகனின் சத்தியம்!

என் இறுதி வரை மட்டுமல்ல என் தலைமுறையும் தி.மு.க தான் – துரைமுருகனின் சத்தியம்!

in News / Local

தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற துரைமுருகன், தன் இறுதி மூச்சு உள்ள வரை தி.மு.க-வில் இருப்பேன் என்று உருக்கமாகப் பேசினார்.

தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பொதுக் குழுக் கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், “நீண்ட நேரம் உரையாற்றும் நிலையில் நான் இல்லை. நீங்களும் இல்லை. எங்களுக்கு இந்த கூட்டம் முடிந்து இன்னும் ஒன்றரை மணி நேரம் வேலை உள்ளது. நீண்ட நேரம் உரையாற்றப் போவது

இல்லை. இந்த பொறுப்புக்கு என்னைத் தகுதி உடையவன், நம்பிக்கையாக இருப்பான், உடன் இருப்பார், உழைப்பார் என்று என் மீது முழு நம்பிக்கை வைத்து, என்னை பொதுச் செயலாளர் ஆக்கிய தலைவருக்கு நன்றியை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கோ இருந்து வந்த என்னை, என்ன ஜாதி, எந்த ஊர் என எதையும் கேட்காமல் என்னை ஒரு தொண்டனாக நண்பனாக, அந்த அளவுக்கு வளர்த்து என்னை அரசியலில் ஆளாக்கி அமைச்சராக்கி எல்லா பதவியும் பார்க்க வைத்த என்னை வளர்த்த தலைவர் கலைஞர் அவர்கள். என் வாழ்நாளில் அவருக்கு நான்

இறுதிவரை நன்றியோடு இருந்தேன். எனக்கும் அவருக்கும் இடையே உறவு என்ன பேசினோம் என்பதை அவர் மாண்டுவிட்டார், நான் சாகும் வரையில் சில விஷயங்களை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தவர். அவர் மறைந்துவிட்ட பிறகு இன்றைக்கு அவரது மகன் தலைவராக வந்திருக்கிறார். இதே மன்றத்தில் நான் அவரை தம்பி வா தலைமைதாங்க வா என்று அழைத்து உட்கார வைத்து அழகு பார்த்தேன்.

தளபதிக்கு ஒரு உறுதிமொழியை தருகிறேன். உங்களை நான் சின்ன வயதிலிருந்து அறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். எந்த காலத்திலும் கலைஞருக்கு துரோகம் நினைத்தது இல்லை. என்னை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். என்னைப் படிக்க வைத்தவர் அவர், பாசம் காட்டியவர். அவர் ஒரு நாள் சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வரும்போது, சட்டையைப் பிடித்து அவரது அறைக்கு இழுத்துக் கொண்டு சென்றார்.

நான் சொல்ற வேலையை செய்வீயா என்று கேட்டார். நான் செய்வேன் என்றேன். நான் சொல்ற இடத்தில் போய் உட்கார். நான் வந்து என்ன அமைச்சர் என்று அறிவிக்கிறேன்” என்றார். அது மட்டும் முடியாது என்றேன். ஏன் என்று கேட்டார். நான் தி.மு.க-வில் இருக்கிறேன் என்றேன். நான் இருக்கும் இடத்தில்தானே நீ இருக்க வேண்டும் என்று கேட்டார்.

நீங்க சினிமாவில் கத்தி சண்டை போடுவதைப் பார்த்து, உங்கள் ரசிகன் ஆகி, நீங்கள் தி.மு.க, ஆகையால் நானும் தி.மு.க-வில் இணைந்திருந்தால், நீங்க போன இடத்துக்கு நான் வருவேன். ஆனால், திராவிட நாடு கிடைக்கும் என்ற போது அண்ணா சொன்ன போது, அதில் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்று அண்ணாவை நம்பி வந்தவன். நான் எப்படி உங்களை நம்பி வருவது.

தி.மு.க-வில் உங்களை சந்தித்தேன். கோயமுத்தூர் போற வண்டியில் ரெண்டு பேரும் போனோம். உங்களுக்கு என்னமோ கோபம் ஜோலார்பேட்டையில் இறங்கிவிட்டீர்கள். நான் ஏன் இறங்க வேண்டும் என்றேன். கடைசியாக என்ன சொல்கிறாய் என்று கேட்டார். என் தலைவர் கலைஞர், என் கட்சி தி.மு.க என்றேன். உட்கார்ந்து இருக்கும் நாற்காலியை ஒரு உதை உதைத்து என்னிடம் வந்து அப்போ நான் யார் என்று கேட்டார்.

அதற்கு நான் அவர் காலில் விழுந்து, என் தெய்வம் போன்றவர் என்று கூறினேன். உடனே கட்டிப்பிடித்து உன் உறுதியைப் பாராட்டுகிறேன் என்று சொன்னார். சட்டமன்றத்தில் சொன்னார், என் தம்பி துரைமுருகன் வலிமை மிக்கவன் என்றார்.
எதற்காக சொல்கிறேன் என்றால், தி.மு.க-வை நினைக்கும் போது இமயமே எனக்கு தூசாகத்தான் தெரியும். என் கட்சி, என் தலைவர், என் கொள்கை, என்று வாழ்ந்துவிட்டவன் நான்.

நான் மட்டுமல்ல தளபதி அவர்களே, என் குடும்பம், என் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக… நான் மறைந்தாலும் கூட நீங்கள் இருப்பீர்கள், உங்களுக்கு நன்றியுள்ள குடும்பமாக இருக்கும் என்று சத்தியம் செய்து தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top