நாகர்கோவிலில், ரெயில்வே விரிவாக்கப்பணிக்கு 65 வீடுகளை இடிக்கப்போவதாக நோட்டீசு ஒட்டியதால் பரபரப்பு!

நாகர்கோவிலில், ரெயில்வே விரிவாக்கப்பணிக்கு 65 வீடுகளை இடிக்கப்போவதாக நோட்டீசு ஒட்டியதால் பரபரப்பு!

in News / Local

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் ரெயில்வே விரிவாக்க பணிகள் நடைபெறவிருப்பதால் பறக்கிங்கால் பகுதியில் உள்ள 65 வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் பலமுறை அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பறக்கிங்கால் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத் தலைவரின் பெயருடன் கூடிய அறிவிப்பு நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளன.

அதில் வருகிற 22-ந் தேதி (அதாவது இன்று) காலை 10 மணிக்கு குடிசைகள் இடிக்கப்படும். என்றும் அதற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது உடமைகளோடு ரெயில்வே இடத்தில் இருந்து காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ரெயில்வே நிர்வாகம் நாளை (அதாவது இன்று) இடிப்பதாக அறிவித்துள்ள எங்களது வீடுகளில் வயது வந்த பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், சிறு குழந்தைகளுடன் கூடிய குடும்பம், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் எதுவும் வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் எங்களது வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கே செல்வோம்? எனவே அதிகாரிகள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் அங்கே சென்று குடியேறுவோம். அதுவரை வீடுகளை இடிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்றனர்.

அவர்கள் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை சந்தித்து தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, குடியிருப்புகளை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பறக்கிங்கால் பகுதியை சேர்ந்த மக்கள் சிலருடன் சென்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பறக்கிங்கால் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு குடியிருப்புகளை இடிக்க ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கேட்டுக்கொண்டார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top