7 பேர் வாக்களிக்க 160 கி.மீ. பயணம் செய்த அதிகாரிகள்

7 பேர் வாக்களிக்க 160 கி.மீ. பயணம் செய்த அதிகாரிகள்

in News / Local

பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் மலை கிராமத்தில் உள்ள 7 பேர் வாக்களிக்க 160 கி.மீ. தூரம் அதிகாரிகள் பயணம் செய்து வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி நேற்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி நடந்தது.

அந்த வகையில் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப்- கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் இந்த பணி நடைபெற்றது.

பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி மலை கிராமங்கள் சூழ்ந்த பகுதியாகும். அதில் ஒரு மலை கிராமமான கோதையாறு மேல்தங்கல் கிராமத்தில் 7 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கென்று ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குப்பதிவு மையத்திற்கு நேற்று பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

மண்டல அலுவலர்கள் பத்மநாபபுரத்தில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக கோதையாறு மேல் தங்கல் கிராமத்திற்கு 160 கி.மீ. தொலைவை கடந்து சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடியில் சேர்த்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top