7 பேர் மட்டுமே பயணம் செய்த ஹெரிடேஜ் ரயில்!

7 பேர் மட்டுமே பயணம் செய்த ஹெரிடேஜ் ரயில்!

in News / Local

ரயில்வே துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மிகவும் பழமை வாய்ந்த நீராவி என்ஜினுடன் கூடிய ‘ஹெரிடேஜ் ரயில்‘ என்ற பாரம்பரிய ரெயில் பயணம் இந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பயணத்தின் போது இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மூலம் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த பாரம்பரிய ரயில் பயணம் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட நாகர்கோவில்–கன்னியாகுமரி இடையே நடைபெற்றது. இந்த ரயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு வெளிநாட்டினராக இருந்தால் ரூ.1,500–ம், உள்நாட்டினராக இருந்தால் ரூ.750–ம், சிறுவர்களுக்கு ரூ.500–ம் கட்டணமாக ரெயில்வே அதிகாரிகள் நிர்ணயம் செய்திருந்தனர்.

முதல் நாள் ரயில் பயணத்தின்போது வெளிநாட்டை சேர்ந்த 20 பேர் மட்டுமே பயணம் செய்தனர். 2–வது நாளாக நேற்று முன்தினம் இயக்கப்பட இருந்தது. முன்பதிவு செய்திருந்த ஒன்றிரண்டு பேரைத்தவிர யாரும் இந்த ரயிலில் பயணம் செய்ய முன்வராததால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் சேவை பற்றி திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததும், விளம்பரப்படுத்தாததும், அதிக கட்டணம் நிர்ணயம் செய்திருந்ததும்தான் இதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததற்கு காரணம் என்று பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக நீராவி என்ஜின் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்து பயணம் செய்ய வந்திருந்தார்கள். இருந்தாலும் அவர்களுக்காக இந்த ரயில் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. 11.30 மணி அளவில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி என்ஜின் ரயில் நேற்று குமரி மாவட்டத்தில் தனது பயணத்தை நிறைவு செய்தது. இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை நீராவி என்ஜின் ரயில் நாகர்கோவிலில் இருந்து மாற்று ரயில் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top