பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு

in News / Local

நாகர்கோவில் நகரத்தின் முக்கிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் பகுதியான பார்வதிபுரத்தில் நெருக்கடியை குறைக்க கட்டப்பட்ட புதிய மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார்வைக்காக மேம்பாலம் இன்று மாலை திறக்கப்பட்டது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக கடந்த 10-ஆம் தேதி திறந்துவிடப்பட்டது. மேலும் சில பணிகள் அந்த பாலத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 51 ஸ்டீல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் அமையும் பகுதியில் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாலம் ‘ஒய்’ வடிவில் அமைந்துள்ளது. பார்வதிபுரம் ஜங்சனில் இருந்து வடசேரி வரும் பாதையில் அமையும் மேம்பால பாதை இருவழிபாதையாகவும், கலெக்டர் அலுவலகம் செல்லும் பாதை ஒரு வழிப்பாதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. பார்வதிபுரம் மேம்பாலத்தில் பஸ் நிலையம் அமையும் இடத்தில் இருந்து பார்வதிபுரம் ஜங்சன் வரை தார் போடும் பணி முடிவடைந்து மேம்பாலத்தில் விளக்குகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று மக்கள் பார்வைக்காக பார்வதிபுரம் மேம்பாலம் திறக்கப்பட்டது. வாகன போக்குவரத்து தொடங்கிய பின், இந்த பாலத்தின் மேல் நடந்து சென்று பார்ப்பது என்பது சிரமமான நிலை ஆகும். எனவே இதை கருத்தில் கொண்டு தற்போது பாலத்தின் மேல் தளத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட்டு, பார்வதிபுரம் மேம்பாலத்தில் இருந்து இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. இதில் நாகர்கோயில் சுற்று வட்டார மக்கள் குடும்பமாக வந்து பார்வையிட்டனர்.இதில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top