சுருளோடு ஊராட்சிக்கு உள்பட்ட பூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காணி மக்கள் வசித்து வருகிறார்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவருக்கு தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அதற்கான கட்டுமான பொருட்களை ஏற்றிய டெம்போ தடிக்காரன்கோணம் வன சோதனை சாவடிக்கு நேற்று பிற்பகல் 3 மணிக்கு வந்தது.
அப்போது அந்த டெம்போவை சோதனை சாவடி வழியாக செல்ல வன காவலர்கள் மறுத்து விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், சுருளோடு பஞ்சாயத்து தலைவி விமலா சுரேஷ், தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சோதனை சாவடியில் இருந்த வன காவலர்களிடம், வீடு கட்டுவதற்காக தானே கட்டுமான பொருட்களை கொண்டு செல்கிறார்கள். எனவே வாகனத்தை அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். அங்கு பொதுமக்களும் திரண்டனர்.
இதை கண்டித்து பஞ்சாயத்து தலைவர்கள் விமலா சுரேஷ், பிராங்கிளின் ஆகியோர் தடிக்காரன்கோணம் ஜங்ஷனில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பொது மக்களும் பங்கேற்றனர். அதில் சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், குலசேகரம் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் மற்றும் கீரிப்பாறை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதே சமயம் மாவட்ட உதவி வன அதிகாரி ஹேமலதாவும் வந்தார். அவர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கட்டமான பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை சாவடி வழியாக அனுமதிக்க மறுத்து விட்டார். இதுதொடர்பாக நாளை (அதாவது இன்று) கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்றும் அவர் கூறினார். அதை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் நடுரோட்டில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments