கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா கோலாகலமாக கொண்டாட்டம்!

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா கோலாகலமாக கொண்டாட்டம்!

in News / Local

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, அன்னதானம், வாகன பவனி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

10-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி அம்மன் புறப்பட்டு வெளியே வரும்போது, துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதையடுத்து அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாளை கோவில் மேலாளர் ஆறுமுகநயினார, பரம்பரை தர்மகர்த்தா கோட்டாரை சேர்ந்த சுப்பிரமணியன் பிள்ளையிடம் ஒப்படைத்தார். பின்னர், அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்ம கர்த்தா கையில் வாள் ஏந்திய படியும், சுண்டன்பரப்பை சேர்ந்த குமரேசன் வில்-அம்பு ஏந்தியபடியும் நடந்து சென்றனர்.

அம்மன் வாகனத்தின் முன் பஜனை குழுவினர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஜனை பாடி சென்றனர். பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்கம் சார்பில் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்தபடியும், பகவதி அம்மன் உருவபடத்தை தாங்கியபடியும் சென்றனர். பெண் பக்தர்கள் கேரள பாரம்பரிய உடையணித்து முத்துக்குடை பிடித்தபடி அணிவகுத்து சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம், செண்டைமேளம், குயிலாட்டம், மயிலாட்டம், தையாட்டம், சிங்காரி மேளம் போன்றவை நடைபெற்றது.

ஊர்வலம் சன்னதிதெரு, 4 ரதவீதிகள், ரெயில்நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம் சந்திப்பு, மகாதானபுரம் தங்கநாற்கரச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக இரவு 7.30 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர், அம்மன் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் ஊர்வலமாக வந்து காரியக்கார மண்டபத்துக்கு சென்று அங்கிருந்து வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரி நோக்கி புறப்படும் நிழ்ச்சி நடந்தது. நள்ளிரவு கன்னியாகுமரி வந்தடைந்த அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து ஆண்டுக்கு 5 முறை மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறப்பட்டு அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று விவேகானந்தர் மண்டபத்துக்கு மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் ஜீவானந்தம், கண்காணிப்பாளர் தங்கம், தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், தொழில் அதிபர்கள் பாலகிருஷ்ணன், சிவலிங்கம், சந்திரன், நயினார்குமார், பாலன், கண்ண பெருமாள், இந்து முன்னணி மாவட்ட துணைதலைவர் அசோகன், விற்பனை வரி ஆலோசகர் வெங்கட கிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் முருகன், துணை செயலாளர் பரமார்த்தலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் தம்பித்தங்கம், துணை செயலாளர் முத்துசாமி, மாவட்ட அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் சி.என். ராஜதுரை, விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, அனுமந்தராவ், பானுதாஸ், பிரவீன் தபோல்கர், கிருஷ்ணமூர்த்தி, ரேகாதவே, கன்னியாகுமரி மண்டல சிவசேனா தலைவர் குமரி ப.ராஜன், மாவட்ட செயலாளர் ஜெயமனோகர், நகர தலைவர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top