சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்

சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்

in News / Local

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு தலைமைபதியின் வடக்கு வாசலில் 6 ஆண்டுகள் தவம் இருந்தார். தவம் நிறைவடையாத நிலையில் திருவிதாங்கூர் மன்னர் அய்யா வைகுண்டசாமியை சிறை பிடித்து வர உத்தரவிட்டதாகவும், இதையடுத்து அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்கள் மற்றும் பக்தர்களுடன் முட்டப்பதி கடலுக்குள் சென்று 2-வது முறையாக விஞ்சை பெற்று அன்று மாலையே சாமிதோப்புக்கு திரும்பி வந்ததாகவும் அகிலத்திரட்டு கூறுகிறது.

அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை சாமிதோப்பிலிருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு முத்துக்குடை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை சாமிதோப்பு தலைமைப்பதியில் அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து முத்துக்குடை ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை பால.பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். பையன் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். பையன் நேம்ரிஷ் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. மேளதாளங்கள் முன் செல்ல தொடர்ந்து முத்துக்குடையுடன் பக்தர்களும் சென்றனர். தலைமைப்பதி, பெரிய ரத வீதியை சுற்றி வந்த ஊர்வலம் தொடர்ந்து கரூம்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், விவேகானந்தபுரம் வழியாக பகல் 12 மணிக்கு முட்டப்பதியை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து முட்டப்பதியில் பணிவிடை நடந்தது.

முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு முட்டப்பதியில் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து ஊர்வலம் சாமிதோப்புக்கு புறப்பட்டது. ஊர்வலமானது கொட்டாரம், பொத்தையடி, அரசம்பதி வழியாக ஊர்வலம் இரவு 8 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதி வந்தடைந்தது. தொடர்ந்து, அய்யா வைகுண்டசாமிக்கு பணிவிடை நடந்தது. ஊர்வலத்தில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top