பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்காததை கண்டித்து கொட்டாரம், தேரேகால்புதூரில் சாலை மறியல்!

பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்காததை கண்டித்து கொட்டாரம், தேரேகால்புதூரில் சாலை மறியல்!

in News / Local

கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்குட்பட்ட ரேஷன் கடை கொட்டாரம் கிட்டங்கி தெருவில் உள்ளது. இந்த ரேஷன் கடை மூலம் கடந்த சில நாட்களாக தமிழக அரசின் அறிவிப்பு படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த அறிவிப்பை எதிர்த்து கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்டதையடுத்து, வறுமை கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து நேற்று காலை வறுமை கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் பொங்கல் பொருட்களுடன், ரூ.1,000 வாங்குவதற்காக ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை முன் திரண்டிருந்தனர். ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள், பணம் வராததால் யாருக்கும் பொங்கல் பொருட்களை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மதியம் 1 மணி வரை பொதுமக்கள் ரேஷன் கடையின் முன்பு காத்திருந்னர். ஆனாலும், பொங்கல் பரிசுதொகை கிடைக்கவில்லை.

இதனால் அங்கு கொட்டியிருந்த பெண்கள் ஆத்திரம் அடைந்தனர் , கொட்டாரம் சந்திப்புக்கு திரண்டு வந்தவர்கள் பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து திடீரென கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கன்னியாகுமரி போலீசாரும் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொங்கல் பரிசு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் நாகர்கோவிலை அடுத்த தேரேகால்புதூரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று காலை பொங்கல் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில் பணம் தீர்ந்து போனதால் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு பணம் வாங்க புறப்பட முயன்றார். ஆனால் வரிசையில் காத்திருந்த மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது கடை ஊழியர் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மீதியிருந்த பணத்தை தான் இதுவரை வினியோகம் செய்தோம். இன்று (நேற்று) வினியோகம் செய்வதற்கு தேவையான பணத்தை உயர் அதிகாரி களிடம் வாங்கி வரவேண்டும். அதன்பிறகுதான் உங்களுக்கு வினியோகம் செய்ய முடியும் என்றார். இதையடுத்து அவரை பணம் வாங்கிவர மக்கள் அனுமதித்தனர். மேலும் அந்த கடை முன்பு மக்கள் ஊழியர் வருவார், வருவார் என காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கடை முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top