கடலோர கிராம மக்களின் வாக்குரிமையை பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு!

கடலோர கிராம மக்களின் வாக்குரிமையை பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு!

in News / Local

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை 48 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலும், மேலும் உள்நாட்டு மீனவர்கள் வசிக்கின்ற 68 மீனவ கிராமங்களிலும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குரிமைகள் நீக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் கிள்ளியூர், குளச்சல், நாகர்கோவில் ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிப்பது மீனவர்களின் வாக்கு வங்கிகள் ஆகும். இந்த நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீனவர்கள் திரளாக வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு சென்றனர். ஆனால் தூத்தூர், இனயம், கடியப்பட்டணம் உள்ளிட்ட ஒவ்வொரு கிராமத்திலும் 500 முதல் 700 வாக்குகள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.

தேர்தலில் வாக்களிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கிய ஜனநாயக உரிமை ஆகும். ஜனநாயக உரிமையை எங்களது சொத்தாகவே நாங்கள் கருதி வருகிறோம். ஏற்கனவே ஒகி புயலில் மீட்கப்படாமல் 245 மீனவர்கள் ஆழ்கடலில் பலியானது மீனவ இனப்படுகொலை என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் தேர்தலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பறித்தது ஜனநாயக படுகொலை ஆகும். ஒகி புயலின்போது புறக்கணிக்கப்பட்ட மீனவர்கள், தங்கள் எதிர்ப்பை வாக்கு மூலம் அளிக்க விரும்பியதை அறிந்தே, சில அதிகாரிகளின் துணையோடு வாக்குகள் திருடப்பட்டு உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் கடலோர கிராம மக்களின் வாக்குரிமையை பெற்று தரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பாதை என்ற இயக்கத்தின் சார்பிலும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top