கன்னியாகுமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான குழித்துறை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்நிலையில் காக்கி சீருடையில் சொகுசு வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ் என்று கூறி திடீர் என வாகன சோதனையில் ஈடுபட்டார். மேலும் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ஐந்நூறு முதல் ஐந்தாயிரம் வரை மிரட்டி கேட்டு, வசூல் வேட்டை நடத்தியுள்ளார். அந்த வாலிபர் அணிந்திருந்த காக்கி சீருடை மற்றும் அவனது செய்கையில் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் நித்திரவிளை அருகே வன்னியூர் பகுதியை சேர்ந்த பிபின் (25) என்றும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்பதாகவும் தெரிவித்தார். மேலும் அங்குள்ள அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடி சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீசாரிடம் பொதுமக்கள் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் வைத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடைபெற்றது. அந்த வாலிபர் வேறு எங்காவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா?..வாலிபரிடம் இருந்து கைபற்ற பட்ட சொகுசு வாகனம் அவனுடையது தானா?.. அல்லது திருட்டு வாகனமா ..உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments