துறைமுக திட்டத்தை கொண்டு வந்தே தீருவேன் - இறுதிக்கட்ட பிரசாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு!

துறைமுக திட்டத்தை கொண்டு வந்தே தீருவேன் - இறுதிக்கட்ட பிரசாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு!

in News / Local

பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் வடசேரியில் பிரசாரத்தை தொடங்கி வேப்பமூடு, ஒழுகினசேரி, வடிவீஸ்வரம், சவேரியார் ஆலயம் சந்திப்பு, பறக்கை விளக்கு, பீச் ரோடு, செட்டிகுளம், டதி பள்ளி சந்திப்பு, பார்வதிபுரம் வழியாக மணிமேடையில் நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெறும் தேர்தல் அல்ல, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தலாகும். இந்தியா பல நாடுகளால் மதிக்கக் கூடிய நாடாக வேண்டுமா? அல்லது அடிமை நாடாக வேண்டுமா? என்பது நீங்கள் அளிக்கும் வாக்குதான் தீர்மானிக்கும். ஆண்டிற்கு 70 சதவீதம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.11 லட்சம் கோடியை கடனாக கொடுத்தவர் பிரதமர் மோடி.

தற்போது பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது, இது மிகவும் வரவேற்கத்தக்கது.

பா.ஜனதாவை மதவாத கட்சி என்று விமர்சிக்கும் கட்சியினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இந்தியாவில் வடக்கே 90 சதவீத கிறிஸ்தவர்கள் உள்ள மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதன் மூலம் உண்மையான மதசார்பற்ற கட்சி பா.ஜனதாதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குமரியில் மார்சல் நேசமணி ஆட்சியில் தொடங்கி பெல்லார்மின், ஹெலன் டேவிட்சன் போன்றவர்கள் வாக்குறுதியான துறைமுக திட்டத்தை 2014-ம் ஆண்டு எச்.வசந்தகுமாரும் ஆதரித்தார்.

தற்போது வர்த்தக துறைமுகம் வேண்டாம் என்று கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார். இளைஞர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தகத் துறைமுகம் வந்தே தீரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாவட்ட மக்களின் முன்னேற்றத்தை உயர்த்தும் துறைமுக திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் இந்த மண்ணில் இருப்பதற்கே அருகதை இல்லாத கட்சி. கடந்த தேர்தலில் போட்டியிட்டு குமரியில் தோல்வியடைந்தவர் தற்போது நாங்குநேரியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு வாக்களித்த குமரி மக்களுக்கு நன்றி சொல்லகூட இங்கு வரவில்லை. தேர்தல் வந்ததும் மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்.

வெற்றியோ.. தோல்வியோ.. பிறந்த மண்ணில் இருந்து கொண்டு மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொள்பவனே உண்மையான மண்ணின் மைந்தன். நான் (பொன்.ராதாகிருஷ்ணன்) உண்மையான மண்ணின் மைந்தன். எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். எனக்கு குடும்பம், குழந்தைகள் இல்லை. எனவே, உங்கள் குழந்தைகளை தத்தெடுத்து முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன். பல வளர்ச்சி பணிகளை கொண்டுவந்து தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக குமரியை மாற்றுவேன்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top