குமரி மாவட்டம் கொல்லங்கோடு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

குமரி மாவட்டம் கொல்லங்கோடு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

in News / Local

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறை பொற்றை பகுதியில் தனியாருக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் டேவிட்ராஜ் (வயது 46). சம்பவத்தன்று இவர், அந்த பள்ளியில் 6–ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், தங்களின் பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதனர். அதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடமும், நிர்வாகத்திடமும் புகார் கூறினர்.

அதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆசிரியர் டேவிட்ராஜ், மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் இதுபற்றி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் டேவிட்ராஜை விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீஸ் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட ஒரு மாணவியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் டேவிட்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சோபியா, விஜயராணி ஆகியோர் ‘கவுன்சிலிங்‘ வழங்கினர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top