நாகர்கோவிலில் சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி  தி.மு.க. சார்பில் போராட்டம்!

நாகர்கோவிலில் சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி தி.மு.க. சார்பில் போராட்டம்!

in News / Local

நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளிலும் குண்டும், குழியுமாக பழுதடைந்து கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலையில் சுரேஷ்ராஜன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்த தயார் ஆனார்கள். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிற 6-ந் தேதிக்குள் பழுதான சாலைகளை சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். அதற்கு பதிலாக அவ்வை சண்முகம் சாலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிகாரிகள் வருகிற 6-ந் தேதிக்குள் சாலைகளை சீரமைத்து தருவதாக உறுதி கூறியுள்ளனர். எனவே மறியல் போராட்டத்துக்கு பதிலாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழியை மீறினால் தி.மு.க. சார்பில் மாவட்டம் தழுவிய அளவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கேட்சன், நிர்வாகிகள் தில்லைச் செல்வம், பசலியான், வக்கீல் ஆனந்த், சேக்தாவூது, சற்குரு கண்ணன், குட்டி ராஜன், சி.என்.செல்வன், அழகம்மாள்தாஸ் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top