பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டம்

in News / Local

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கொச்சுவேளி பயணிகள் ரயிலுக்கு பயன்படுத்துவதால், சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக்கப்படுவதை கண்டித்து வரும் 24-ஆம் தேதி நாகர்கோவில் ஜங்ஷன் ரயில்நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

எம்எல்ஏக்கள் ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, பிரின்ஸ் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, மதிமுக மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, நாகர்கோவில் நகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ் உட்பட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் குமரி மாவட்ட பயணிகளுக்கு மிக முக்கிய ரயிலாக உள்ளது. இந்த ரயிலின் போக்குவரத்தை பாதிக்கச்செய்யும் வகையிலான நடவடிக்கைகளை திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். முன்பு பெங்களூர் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டதால் அந்த ரயில் தாமதமாக வந்து சேர்ந்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாக சென்னைக்கு இயக்கப்படும் நிலை இருந்தது.

தற்போது பிரச்சனை தீர்ந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி முதல் மீண்டும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் புறப்படும் நேரம் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலையாக தற்போது உள்ளது. தினமும் காலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, கொச்சுவேளி செல்லும் பயணிகள் ரயிலுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னை செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் மாலையில் மிகவும் தாமதமாக புறப்படுகிறது.

எனவே இதனை கண்டித்தும், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை கழுவி சுத்தப்படுத்துவதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வருவதை கண்டித்தும், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து கொடுக்கப்படாததை கண்டித்தும், குமரி மாவட்ட ரயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் அல்லது நாகர்கோவிலை மையமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெறும். இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உட்பட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top