வாகனம் நிறுத்த கட்டணம் வசூலித்ததை எதிர்த்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல்!

வாகனம் நிறுத்த கட்டணம் வசூலித்ததை எதிர்த்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல்!

in News / Local

நாகர்கோவில் நகரில் வேப்பமூடு சந்திப்பு, பூங்கா முன்புறம் இருந்து கோர்ட்டு நுழைவு வாயில் வரை உள்ள சாலையில் வாகனம் நிறுத்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதோடு, கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதாவது, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10-ம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40-ம் நிர்ணயித்து இருக்கிறார்கள். அதுவும் 2 மணி நேரம் மட்டுமே அங்கு வாகனம் நிறுத்திக் கொள்ளலாம். 2 மணி நேரத்தை தாண்டினால் அதே கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும்.

இந்த திடீர் கட்டண வசூல் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும் இந்த புதிய நடவடிக்கை முறையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட இடங்களில் அறிவிப்பு பேனர்களும் வைக்கப்பட்டன. ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவு அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

வேப்பமூடு சந்திப்பு பகுதி மற்றும் கோர்ட்டு ரோட்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன., மேலும் , அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எங்குமே வாகன நிறுத்தம் கிடையாது. இதனால் கடைக்காரர்கள் மற்றும் கடைகளுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை கடைக்கு முன் உள்ள சாலையில் நிறுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி இருக்க வாகனங்களை நிறுத்த திடீரென கட்டணம் வசூலிப்பது எத்த முறையில் சரியானதாக இருக்கும்? என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த நிலையில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேப்பமூடு சந்திப்பு மற்றும் கோர்ட்டு ரோட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் திடீரென வேப்பமூடு சந்திப்பில் ஒன்று கூடி, வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வியாபாரிகள் அங்கு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடை உரிமையாளர்களுடன் கடைகளில் வேலை பார்ப்பவர்களும் சேர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பான சூழலும் உருவானது.

இதனையடுத்து கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கையை தெரிவிக்காமலேயே போராட்டம் நடத்தினால் தீர்வு ஏற்படாது. எனவே உங்களது கோரிக்கையை முதலில் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்று கூறி போராட்டத்தை கைவிடும்படியும் போலீசார் அறிவுறுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து உடனே மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

இதுபற்றி சாலை மறியல் போராட்டம் நடத்திய வியாபாரியிடம் கேட்டபோது, “நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் வாகன நிறுத்தமே கிடையாது. அதே சமயம் பூங்காவுக்குள் மட்டும் வாகனங்களை நிறுத்த அனுமதித்து இருந்தார்கள். அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது பூங்காவுக்குள் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக சாலை ஓரங்களில் வாகனம் நிறுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளனர். அதிலும் அநியாய முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 மணி நேரத்துக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிப்பது எந்த வகையில் நியாயம். நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ள இந்த சமயத்தில் சாதாரண மக்களை பாதிக்கும் விதத்தில் நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. எனவே வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும்“ என்றனர்.

இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சிலர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலையோரத்தில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முறையை தற்காலிகமாக ரத்து செய்தனர். ஆனால் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஆஸ்பத்திரி இருந்த இடத்தில் மட்டும் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும்படி கூறினார்கள்.

அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட இடங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நகராட்சி ஆணையரை சந்தித்து பேசி கொள்ளுங்கள் என்றும் கடைக்காரர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இந்த விஷயம் தொடர்பாக ஆணையர் சரவணகுமாரை சந்தித்து பேச கடைக்காரர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top