குடிநீர் வழங்கக்கோரி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த வகையில், பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு முன்சிறை மங்காடு ஆற்றுநீர் சுத்திகரிக்கப்பட்டு வீடுகளுக்கும், தெரு குழாய்களுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கோடை காலங்களில் ஆழ்த்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் நகராட்சி குடிநீரையே நம்பியுள்ளனர். ஆனால் தற்போது நகராட்சியின் 15-வது வார்டு பொதுமக்களுக்கு 12 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தக்கலை ராமன்பரம்பு 15-வது வார்டு பகுதி பொதுமக்கள் பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நகராட்சி மேலாளர் சக்திகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உடனே குடிநீர் வழங்கப்படும். குடிநீர்தட்டுப்பாட்டை போக்கி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
0 Comments