டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் ஊழியர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு!

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் ஊழியர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு!

in News / Local

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோர டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சந்திப்பு அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டு வயக்கரை பகுதியில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள் வயக்கரை பகுதியில் ஓன்று மதுபான கடை திறப்பதற்கு எதிராக ஓன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அங்கு டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மணவாளக்குறிச்சியில் டாஸ்மாக் கடை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் டாஸ்மாக் ஊழியர்கள் வயக்கரை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் திடீரென ஆட்டோவில் டாஸ்மாக் மதுபானங்களை கொண்டு வந்து இறக்கினர். இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.

ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் மாலை 4.30 மணியளவில் மதுக்கடை திறக்க இருந்த கட்டிடத்தின் முன்பு திரண்டனர். பின்னர், அவர்கள் மதுபான கடையை திறக்க கூடாது என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை மீட்டார். அப்போது, கொண்டு வரப்பட்ட மதுபானங்களை திரும்ப எடுத்து சென்றால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் கல்குளம் தாசில்தார் ராஜாசிங் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மதுக்கடை திறக்கப்படாது என்று அவர் உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top