தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!

தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!

in News / Local

தக்கலை அருகே கல்லுவிளை சந்திப்பில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் கூட்டமாவு ஆள்காட்டிகுளம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை ஓன்று திறக்கப்பட்டது.

அந்த பகுதியில் ரே‌ஷன் கடை, பள்ளிக்கூடம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளதால், அங்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலத்த எதிர்ப்பை தொடர்ந்து அங்கு புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க இருப்பதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூட்டமாவு சகாய அன்னை ஆலய பங்குதந்தை சேவியர் மைக்கில் தலைமையில் திரண்டு நேற்று முன்தினம் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

பின்னர் நேற்று காலை கூட்டமாவு சகாய அன்னை ஆலயத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் திரண்டனர்.

தொடர்ந்து ஆலயத்தில் இருந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்று கல்லுவிளை சந்திப்பில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பால் துரை ஆகியோர் செல்போன் மூலம் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று கூறினர்.

எனினும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சகாய அன்னை ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கல்லுவிளை சந்திப்புக்கு வந்தனர். பின்னர், அங்கு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது நேரம் கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், ஆள்காட்டி குளம் பகுதியில் அரசு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்தால் சுற்றுவட்டார பொது மக்களை ஒன்று திரட்டி கல்லுவிளை சந்திப்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் முளகுமூடு புனித மரியன்னை ஆலய பங்குதந்தை டோமினிக் கடாட்சதாஸ், தக்கலை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top