கீரிப்பாறை அருகே தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

கீரிப்பாறை அருகே தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

in News / Local

கீரிப்பாறை அடுத்துள்ள பரளியாறு பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அப்பகுதியில் வசிக்கும் 47 குடும்பத்தினர் பொருட்கள் வாங்கி பயன்பெற்று வந்ததாகவும், ஆனால் தற்போது இந்த கடையில் 30 குடும்பங்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் கொடுப்பதாகவும், மீதி உள்ள 17 குடும்பங்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் உணவு பொருட்கள் வாங்க சென்றவர்களுக்கு புழு, பூச்சிகள் கிடந்த தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டதாகவும், அதைப்பற்றி, அரிசியை வாங்கிய பொதுமக்கள் கடையின் விற்பனையாளரிடம் புகார் கூறியதாகவும் தெரிகிறது.. அதற்கு அவர், அடுத்த மாதம் தரமான அரிசி வழங்குவதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் இந்த மாதம் ரேஷன் கடைக்கு சென்ற பொதுமக்களுக்கு அதேபோல் புழு, பூச்சி கிடந்த அரிசி வினியோகம் செய்ய இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து 47 குடும்பத்தினரும் அரிசியை வாங்காமல் புறக்கணித்தனர். அப்போது, அரிசியை வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று கடைக்காரர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு தோவாளை வட்டார காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் தலைவர் மணிகண்டன், குமார், அய்யப்பன் ஆகியோர் தலைமையில் நேற்று மதியம் 2 மணியளவில் பரளியாறு ரேஷன் கடையை முற்றுகையிட்டு தரமற்ற அரிசியை வினியோகம் செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கீரிப்பாறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர லிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்ட வழங்கல் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்தனர். அதைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் போனில் பேசினார்.

அப்போது, அதிகாரி பொதுமக்கள் புகார் கூறும் அரிசியை கடையின் ஊழியர்களை அலுவலகத்துக்கு எடுத்து வரும்படியும், அது தரமற்றதாக இருந்தால் அவற்றை மாற்றி தரமான அரிசி வழங்கப்படும் என்று உறுதி கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top