கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு!

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு!

in News / Local

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யார் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் எவை என்பதும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்த தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பலர் கட்சி தலைமையையும், தங்கள் கோஷ்டி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வாய்ப்பு பெறுவதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆதரவு இருந்தாலும் மேலிட தலைவர்களின் ஆசி இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பலர் டெல்லியில் முகாமிட்டு வாய்ப்பு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தற்போது ஓரளவு வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை இறுதி செய்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்து வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்று தெரிகிறது. அதற்கான பணிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்து வருகிறார். தற்போது தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்த உத்தேச பட்டியல் பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.

அதன்படி பார்த்தால், கன்னியாகுமரியில் வேட்பாளராக களம் இறங்க ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ். ராபர்ட் புரூஸ், வின்சென்ட் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், தேனியில் ஜே.எம்.ஆரூண், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருச்சியில் திருநாவுக்கரசர், கரூரில் ஜோதிமணி, ஆரணியில் கிருஷ்ணசாமி அல்லது முருகானந்தம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார், திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்பி விஸ்வநாதன், விக்டரி ஜெயக்குமார், செல்வப்பெருந்தகை, ராணி ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் சார்பில் நேர்காணல் நடத்தப்பட்ட பின்பு, கட்சி தலைமை போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டது. முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top