நாகர்கோவிலில் நேற்று இடி– மின்னலுடன் மழை!

நாகர்கோவிலில் நேற்று இடி– மின்னலுடன் மழை!

in News / Local

குமரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் அனலாக கொதிக்கிறது. மின்விசிறி உதவியின்றி மக்களால் வீடுகளில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளுத்து வாங்கும் வெயிலின் வெப்பத்தால் மக்கள் இரவு, பகல் நேரங்களில் வியர்வையால் குளித்து வந்தனர். இதனால் பெரும்பாலானோர் பலமுறை குளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இந்த கடுமையான வெயிலின் உஷ்ணத்தோடு, தேர்தல் பிரசாரமும் அனல் பறந்தது. வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரித்தனர். நேற்று முன்தினம் வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் குமரி மாவட்டம் முழுவதும் வெயில் குறைந்து வானம் கருமேகக்கூட்டங்களால் சூழப்பட்டு இருந்தது. குழித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்தநிலையில் நாகர்கோவிலில் நேற்று காலையிலும் வழக்கம்போல் வெயில் இருந்தது. மதியம் 12 மணிக்குப்பிறகு வானம் மேகங்களால் சூழப்பட்டு இருண்டு காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இடி– மின்னலுடன் பெய்த மழை சுமார் 45 நிமிடம் கொட்டித்தீர்த்தது.

இதனால் நாகர்கோவில் கேப்ரோடு, செட்டிகுளம் ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, கலெக்டர் அலுவலகம் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சில இடங்களில் சாக்கடையுடன் மழை நீரும் கலந்து ஓடியதால் கருப்பு நிறத்தில் வெள்ளம் பாய்ந்தோடியது. இதேபோல் நகரின் பல தெருக்களிலும் மழை நீர் ஆறாக ஓடியது. இந்த மழை, கோடை வெயிலில் சிக்கித் தவித்த மக்களுக்கு இதமாக இருந்தது.

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 53.2, பெருஞ்சாணி– 53.4, சிற்றார் 1– 35.4, சிற்றார் 2– 7, புத்தன் அணை– 54, பூதப்பாண்டி– 34.6, களியல்– 6.2, கன்னிமார்– 42.4, குழித்துறை– 54.2, சுருளக்கோடு– 30, தக்கலை– 1, குளச்சல்– 11.4, இரணியல்– 14.4, மாம்பழத்துறையாறு– 2, கோழிப்போர்விளை–14, அடையாமடை– 11, முள்ளங்கினாவிளை– 4, ஆனைக்கிடங்கு– 6.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top