குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை, மக்கள் மகிழ்ச்சி!

குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை, மக்கள் மகிழ்ச்சி!

in News / Local

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் கொடுமையால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து ஒரு விடிவு கிடைக்காத என்று ஏங்கி வந்த நிலையில் நாகர்கோவிலில் கடந்த புதன்கிழமை ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. அதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. அதன்பிறகும் மலையோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, வில்லுக்குறி, தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது. மலையோர பகுதிகள், அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

நாகர்கோவிலில் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வை சண்முகம் சாலை, செம்மாங்குடி சாலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, ஆராட்டு சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

பெரும்பாலான சாலைகளில் மழை நீருடன், கழிவுநீரும் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. மேலும் பல்வேறு சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீரில் அடித்து வரப்பட்டன. இதனால் மழை பெய்து முடிந்ததும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலைகளில் நிறைய கிடந்தன.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

பேச்சிப்பாறை– 19, பெருஞ்சாணி– 16.4, சிற்றார் 2– 16.2, சுருளோடு– 29.2, கன்னிமார்– 1.2, புத்தன் அணை– 15.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது. மழை காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top