தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) பேசியதாவது:-
தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மொத்த மீனவர்களில் 22 சதவீதம் மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளனர். அங்கு மைலாடி பகுதியில் செயல்பட்டு வரும் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முழுக்க முழுக்க சுயநிதி கல்லூரியாக செயல்படுகிறது.
அங்கே இருக்கும் ஒவ்வொரு துறை படிப்பிற்கும் ஒவ்வொரு பருவநிலைக்கும் ரூ.75 ஆயிரம் கட்டணம் செலுத்தி படிக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன்கருதி சுயநிதி கல்லூரியாக செயல்படுகின்ற மீன்வள கல்லூரியை முழுமையான குறைந்த கல்வி கட்டணம் செலுத்தக்கூடிய அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி கிராமத்தில் பிறந்து குளச்சல் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு காமராஜர் அமைச்சரவையில் மீன்வளத்துறை மற்றும் உள்ளாட்சி துறையில் பணியாற்றிய பாரம்பரிய மீன்பிடி தொழில்நுட்ப திட்டத்தை அறிமுகம் செய்த லூர்தம்மாள் சைமன் பெயரை இந்த கல்லூரிக்கு சூட்ட வேண்டும். அவருக்கு குளச்சலில் மணிமண்டபமும் அமைத்து தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பதில் அளித்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-
மீன்வள பல்கலைக்கழகம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 2012-ல் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் 7 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 16 பட்டப்படிப்புகள் உள்ளது. 1121 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள். மாணவர் சேர்க்கை கூடும் பட்சத்தில் அரசு கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments