கடல் சீற்றத்தால் வீடுகள் இடியும் அபாயம்: மாவட்ட வருவாய் அதிகாரியிடம் எம்.பி வசந்தகுமார் மனு!

கடல் சீற்றத்தால் வீடுகள் இடியும் அபாயம்: மாவட்ட வருவாய் அதிகாரியிடம் எம்.பி வசந்தகுமார் மனு!

in News / Local

குமரி மேற்கு மாவட்டப்பகுதிகளான இரையுமன்துறை, வள்ளவிளை, தூத்தூர், பூத்துறை, காருண்யாபுரம் போன்ற கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் கடல்சீற்றம் ஏற்பட்டது. நேற்றும் சில பகுதிகளில் கடல்சீற்றம் தொடர்ந்தது. பூத்துறை பகுதியில் கடற்கரையையொட்டி உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.

இந்தநிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வுகாண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. அவர்களுடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

பின்னர் எச்.வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பூத்துறை கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு இடியும் நிலையில் உள்ளன. இதைத்தடுக்க உடனடியாக போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல்கட்டமாக கற்களை போட்டு கடல் சீற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி கூறி உள்ளார்.

குமரி மாவட்டத்தில் 72 கி.மீ. தூரத்துக்கு கடற்கரை கிராமங்கள் உள்ளன. கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகாண ரூ.3 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் நிதி உதவி செய்ய வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பேசி உள்ளேன். மீண்டும் இந்த பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் பேசி நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அடைந்தது தோல்வி அல்ல. பணபலம், அதிகார பலம், பயமுறுத்தல் ஆகிய காரணங்களால் அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. மக்களை ஏமாற்றி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறு வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top