பூதப்பாண்டி அருகே 5 நாட்களாக குடிதண்ணீர் வினியோகம் இல்லை, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!

பூதப்பாண்டி அருகே 5 நாட்களாக குடிதண்ணீர் வினியோகம் இல்லை, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!

in News / Local

பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதியில் பள்ளிகொண்டான் அணை உள்ளது. இந்த அணையின் அருகே பழையாறு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஞாலம், செக்கடி, கண்டங்குலி, அந்தரபுரம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாததாலும், சுட்டெரிக்கும் தற்போதைய கோடை வெயில் காரணமாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு பழையாற்றில் போதுமான அளவு தண்ணீர் இல்லை, இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்களுக்கு கடந்த 5 நாட்களாக முறையாக குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, முன்னாள் தோவாளை ஒன்றிய தலைவர் பூதலிங்கம் பிள்ளை தலைமையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாரிசெல்வன், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் செரீனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தினர்.

அதிகாரிகள் விரைவில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top