கன்னியாகுமரி ஓட்டல் உரிமையாளர் வீட்டில் துணிகர கொள்ளை!

கன்னியாகுமரி ஓட்டல் உரிமையாளர் வீட்டில் துணிகர கொள்ளை!

in News / Local

கன்னியாகுமரி, சுவாமிநாதபுரம் ஒற்றைபுளி பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன் நாயர். இவருடைய மனைவி மாலதி (வயது 55). இவர்களுக்கு லட்சுமி (31), அஞ்சலி (27) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களுக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் சொந்தமாக ஓட்டல் ஓன்று உள்ளது. குட்டப்பன் நாயர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார். அதன்பின்பு, ஓட்டலை மாலதி தான் நடத்தி வருகிறார். மேலும், மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். இதனால், கன்னியாகுமரியில் உள்ள வீட்டில் மாலதியும், அவருடைய கணவரின் சகோதரி சரஸ்வதியும் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலதியும், சரஸ்வதியும் காரில் பாறசாலையில் உள்ள மூத்தமகள் லட்சுமியின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று இருவரும் கன்னியாகுமரிக்கு திரும்பினர். மதியம் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்ததும், மாலதி ஓட்டலை கவனித்து விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டு சாவியை சரஸ்வதியிடம் கொடுத்து அனுப்பினார்.

வீட்டுக்கு சென்ற சரஸ்வதி முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற போது, வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தன. அறைகளில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த துணிகள் தூக்கி வீசப்பட்டிருந்தன. மேலும், வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதுகுறித்து மாலதிக்கு தகவல் கூறினார். மாலதி வீட்டுக்கு விரைந்து வந்து, பீரோக்களில் இருந்த பொருட்களை சரி பார்த்தார். அப்போது, அவைகளில் இருந்த 38 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த நகை, மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 9 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன், மேப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஓட்டல் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top