புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடற்கரை சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கடற்கரையை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதாவது, ரூ.3 கோடியே 80 லட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
மேலும், கடலில் குளித்து விட்டு வரும் பக்தர்கள் ஈரத் துணிகளை மாற்றுவதற்காக உடை மாற்றும் அறை, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள், வைபை வசதி, நடைபாதை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் கழக படகு துறையில் ரூ.1 கோடியில் படகு தளம் சீரமைக்கும் பணியும் நடக்கிறது.
இந்த பணிகளை குமரி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பயிற்சி கலெக்டர் ரிஷாப், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, கடற்கரையை மேலும் அழகுபடுத்த என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். இந்த ஆய்வின் போது மாவட்ட திட்ட அதிகாரி பிச்சை, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன்,
சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ், பேரூராட்சி உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம், பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் சந்திரகுமார், ஏசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments