குமரி மாவட்டத்தில் தபால் வங்கி கணக்கை இனி வீட்டில் இருந்தே தொடங்கலாம்!

குமரி மாவட்டத்தில் தபால் வங்கி கணக்கை இனி வீட்டில் இருந்தே தொடங்கலாம்!

in News / Local

கிராமப்புற மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 1-9-2018 அன்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் இந்திய தபால் பட்டுவாடா (இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ்) வங்கி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வங்கி சேவை நாடு முழுவதும் தற்போது மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலும், மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தோடும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்திய தபால் பட்டுவாடா வங்கி சேவை திட்டத்தில் கணக்கு தொடங்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. விஜயகுமார் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வந்தார். அவரை குமரி மாவட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் தபால்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் விஜயகுமார் எம்.பி. இந்திய தபால் பட்டுவாடா வங்கி திட்டத்தில் தனது பெயரில் புதிதாக கணக்கு ஒன்றை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி ஷீஜா, உதவி கண்காணிப்பாளர் செந்தில்குமார், இந்திய தபால் பட்டுவாடா வங்கி திட்ட மாவட்ட மேலாளர் நவீன், மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கனகராஜன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது:-

இந்திய தபால் பட்டுவாடா வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது மிகவும் எளிதாகும். இதில் பூஜ்ஜிய இருப்பு கணக்கு வசதி உண்டு. ஒரு தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கினால், அதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேவை பெறலாம். வீடு தேடி வரும் வங்கி சேவை என்பதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.

அதேபோல் இந்த திட்டத்தில் வங்கி சேவையைப் பெற வீடுகளில் இருந்தபடியே அந்தந்த பகுதி தபால்காரர்கள் மூலமாக வங்கி கணக்கை தொடங்கலாம். தபால் நிலையங்களுக்கு வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்காக ஒவ்வொரு தபால்காரர்களிடம் வங்கி கணக்கு தொடங்குவதற்கு வசதியாக கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மொபைல் பேங்க் அப்ளிகேசன், மிஸ்டு கால் பேங்கிங், கியூ.ஆர்.குறியீடு போன்ற அனைத்து வசதிகளும் உண்டு. குமரி மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 13 ஆயிரம் பேர் தபால் பட்டுவாடா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் உள்ள தொகை தபால் நிலைய சாதாரண சேமிப்பு வங்கி கணக்குக்கு மாற்றப்படும். இதுமட்டுமின்றி தற்போது அனைவரின் வங்கி கணக்கிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வங்கிகளின் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைத்தவர்கள் தங்களுக்கு அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்றால் தபால் நிலையத்தில் உள்ள இந்திய தபால் பட்டுவாடா வங்கிக்கு வந்து அவர்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ? அந்த வங்கியின் பெயரைக்கூறி கைரேகை பதிவு செய்து தங்களுக்கு தேவையான தொகையை பெறலாம். இதற்கு சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்கள் எதிர்காலத்தில் இந்திய தபால் பட்டுவாடா வங்கிக்கு மாற்றப்பட உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவையை தபால் நிலையங்களிலும் தொடரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top