பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளால் நாகர்கோவிலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி!

பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளால் நாகர்கோவிலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி!

in News / Local

நாகர்கோவிலில் உள்ள முக்கிய சாலை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டிய இந்த பணி 8 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணியை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் நாகர்கோவில் மணிமேடை பகுதி முதல் அண்ணா பஸ் நிலையம் வரையிலான பகுதி, கோட்டார் பஜார் சாலை, கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு செல்லும் சாலை, அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. மற்றொருபுறம் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

பஸ் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார் போன்ற வாகனங்களில் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள். இதனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்த வாகன போக்குவரத்தை விட நாகர்கோவில் நகரில் இருசக்கர வாகனங்கள் முதல் 4 சக்கர வாகனங்கள் வரையிலான வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே தற்போது நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளால் சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. மறுபகுதியில் மண் குவியல்களும், குழிகளுமாக உள்ளன.

இதனால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பணிகள் நடைபெறும் சாலையின் ஒரு பகுதியை கடந்து செல்ல 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை ஆகிறது. நேற்றும் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக மணிமேடை பகுதி, அவ்வை சண்முகம் சாலை, கோட்டார் பகுதிகளில் காலை முதல் மாலை வரை வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த போக்குவரத்து போலீசாரும் கடும் பிரயத்தனம் செய்தனர்.

இது ஒருபுறமிருக்க தற்போது ஆடிக்காற்று பலமாக வீசுவதால் சாலையில் நடுவே குவித்து வைக்கப்பட்டு இருக்கும் மண்குவியல்களில் இருந்து கிளம்பும் புழுதிக்காற்று வாகன ஓட்டிகளின் கண்களை நிறைத்து, அவர்களை நிலைகுலைய வைக்கிறது. இதனால் பலர் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாகும் நிலையும் உருவாகி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக இந்த பணிகளை முடித்து, போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top