படகு மீது கப்பல் மோதல்: குமரி மீனவர்கள் மாயம்

படகு மீது கப்பல் மோதல்: குமரி மீனவர்கள் மாயம்

in News / Local

கர்நாடக மாநிலம் அருகே படகு மீது  சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதியதில், 3 மீனவர்கள் பலியானார்கள். மாயமான குமரி மீனவர்கள் உள்பட 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 38). இவர், மாமனார் தாசன் (60) என்பவருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான அரப்பா என்ற மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்றார். இவர்களையும் சேர்த்து தமிழக மீனவர்கள் 7 பேரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 7 மீனவர்களும் என 14 பேர் படகில் பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 55 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஐ.பி.எல். லீ ஹாவேரே என்ற சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மோதியது. இதனால் படகு கடலில் மூழ்கியது. 

இதில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனில் தாஸ் ஆகிய இரு மீனவர்களையும் கப்பல் ஊழியர்கள் மீட்டனர். 

இந்த விபத்தில் 3 மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டது.

அந்த படகில் இருந்த அலெக்சாண்டர், தாசன் உள்பட 9 மீனவர்கள் மாயமானார்கள். இது பற்றி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து, விபத்து ஏற்படுத்திய கப்பலை ஆழ்கடலில் சிறை பிடித்தனர்.

மேலும் மாயமான 9 மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும், மாநில பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான விஜய்வசந்த் குளச்சல் வந்து, மாயமான மீனவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். விஜய்வசந்த் நிருபர்களிடம் பேசும் போது, மாயமான மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயமான மீனவர்கள் மீட்கப்படும் வரை, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறும் போது, மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும். மேலும் ஆழ்கடலில் மீன்பிடி விசைப் படகுகளுக்கும், மீனவர்களுக்கும் கப்பல்களால் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top