பணபலன் கொடுக்காமல் மூடப்பட்ட முந்திரி தொழிற்சாலையை தொழிலாளர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நித்திரவிளை அருகே ஆலங்கோட்டில் ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் கடந்த 15 தினங்களுக்கு முன் பணிகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் உள்ள சில பொருட்களை அதன் உரிமையாளர் எடுத்து சென்றார். ஆனால், தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்களுக்கு சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், போனஸ் போன்ற பணபலன்களை வழங்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் தொழிற்சாலையில் மீதம் இருந்த பொருட்களை எடுத்து செல்ல வாகனம் வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன் கூடினர். தங்களுக்கு சேர வேண்டிய பண பலன்களை தந்துவிட்டு பொருட்களை எடுத்து செல்லுங்கள் என கூறி போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த வாவறை பஞ்சாயத்து தலைவி மெற்றில்டா, ஏ.ஐ.டி.யு.சி. யின் மாவட்ட தலைவர் துரைராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பணபலன் வழங்குவது குறித்து தொழிற்சாலை உரிமையாளருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அந்தப் பகுதியில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலை உரிமையாளரிடம் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
முதலில் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தார். அப்போது தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறினார். இதையடுத்து வருகிற சனிக்கிழமைக்குள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டிய பணபலன்களை வழங்கி விட்டு பொருட்களை எடுத்து செல்வதாக உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments