கடலில் மூழ்கி மாயமாகி பிணமாக மீட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்

கடலில் மூழ்கி மாயமாகி பிணமாக மீட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்

in News / Local

குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மிக்கேல் வேதநாயகம். இவரது மகன் சச்சின் (வயது 14).

இவரது நண்பர்கள் ஆன்றோ ரக்‌ஷன் (11), சகாய ரெஜின் (12), ரஹீத் (13) உள்பட 10 சிறுவர்கள் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது கடலில் விழுந்த பந்தை எடுப்பதற்காக சென்றபோது சச்சின், ஆன்றோ ரக்‌ஷன், சகாய ரெஜின், ரஹீத் ஆகிய 4 பேரையும் கடல் அலை இழுத்துச் சென்றது.

இதையடுத்து சச்சின், ஆன்றோ ரெக்‌ஷன் இருவரையும் மீனவர்கள் மீட்டனர். சச்சின் மீட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். மாயமான மற்ற இருவரையும் தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து கடலோர காவல் படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் சகாய ரெஜின், ரஹீத் இருவரும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றிரவு சின்னவிளை கடலில் சகாய ரெஜின் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த மீனவர்கள் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சகாய ரெஜினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சகாய ரெஜின் பிணமாக மீட்கப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும், அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். பிணமாக மீட்கப்பட்ட சகாய ரெஜின் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

சகாய ரெஜின் பிணமாக மீட்கப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும், சக மாணவர்கள் கண் கலங்கினர். பள்ளியில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஏற்கனவே சச்சின் பலியாகி இருந்த நிலையில் சகாய ரெஜினும் பிணமாக மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

மாயமான ரஹீத்தை தேடும் பணி இன்று 3-வது நாளாக நடக்கிறது. 3 நாட்களாகியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீனவர்களும், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top