மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து - எச்.வசந்தகுமார் பிரசாரம்!

மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து - எச்.வசந்தகுமார் பிரசாரம்!

in News / Local

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று திறந்த ஜீப்பில் சென்று, கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். தேங்காப்பட்டணம், அம்சி, அரசகுளம், மணியாரங்குளம், வழுதூர், கையாலவிளை, காட்டுவிளை, மூன்றுமுக்கு, கைசூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக தேங்காப்பட்டணம், பைங்குளம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்து பேசியபோது கூறியதாவது:-

5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.கா அரசு நாட்டை அழித்து விட்டது. ஜி.எஸ்.டி. என்ற கொடுமையான வரியை விதித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை கஷ்டப்படுத்தியது மட்டும் அல்லாமல் இன்று மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி மூலம் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் அதானிக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி 2 கோடி பேருக்கு வேலை கேட்டால், இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார்கள். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார் மோடி. அதையும் கொடுக்கவில்லை. எனவே இனிமேல் பா.ஜனதா கட்சியால் மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது. ராகுல் காந்தியால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். அதனால்தான் கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்கிறோம்.

ஏழை இந்து மாணவர்களுக்கு படிப்பதற்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவேன் என்று சொல்லித்தான் கடந்த முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். அதை அவர் வாங்கித்தரவில்லை. சொன்ன சொல்லை காப்பாற்றாத பொன்.ராதாகிருஷ்ணன் எப்படி வாக்கு கேட்க மீண்டும் வருகிறார்.

நமது நாட்டில் ஏழைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்றும், படிப்பதற்காக மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் என்று ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார். அவர் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததும் இந்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவார். ஜி.எஸ்.டி. என்ற வரியை கொண்டு வந்து வியாபாரிகளுக்கு தூக்கமே இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டனர். வியாபாரியை கெடுப்பது ஜி.எஸ்.டி.தான்.

1000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 280 ரூபாய் ஜி.எஸ்.டி. வரி. 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 2800 ரூபாய் வரி. வியாபாரம் சரியாக நடைபெற கை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள். அதன்மூலம் நல்லாட்சி நடைபெறும். குமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடியை முதலீடு செய்திருப்பதாக பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். மத்திய அரசு எப்போது இந்த நிதியை ஒதுக்கீடு செய்தது? பா.ஜனதா பொய்யைத்தான் சொல்லும். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு வசந்தகுமார் பேசினார்.

பிரசாரத்தின்போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோட்டார் ஆயர் நசரேன்சூசை, குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல், மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், தக்கலை ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், இந்திய சுவிஷேச திருச்சபை பேராயர் சேம் இயேசுதாஸ், லுத்தரன் திருச்சபை தலைவர் சிவிஷேச முத்து மற்றும் பல்வேறு சபைகளின் நிர்வாகிகளை எச்.வசந்தகுமார் சந்தித்து ஆசி பெற்று, ஆதரவு திரட்டினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top