குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பத்ரி நாராயணன், நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். இதில் கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், மணிமாறன், உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, துணை சூப்பிரண்டுகள் கணேசன், பாஸ்கரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேசும்போது கூறியதாவது:-
ஒவ்வொரு போலீஸ் நிலைய போலீசாரும், தினமும் காலையில் நடைபெறும் ரோல்காலில் தவறாது பங்கேற்க வேண்டும். காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிலைநாட்டும் வகையில் பொதுமக்களுடன் அன்பாக பழக வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். காவல்துறையில் பணியாற்றும் நாம் பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
குற்றம், குறைகளை தெரிவிக்க நம்மிடம் வரும் மக்களை நம்மில் ஒருவராக கருதி அவர்களது குறைகளை தீர்த்து வைக்க நாம் முன்வரவேண்டும். இதன்மூலம் பொதுமக்களிடம் நமக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பணியாற்றும் நாம் மிகுந்த கவனத்தோடும், பாதுகாப்போடும் பணியாற்ற வேண்டும். நம்மை முதலில் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப முககவசம், கையுறை போன்றவற்றை அணிந்து பணியாற்ற வேண்டும். உங்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாரையும் பாதுகாப்பு கவசங்களை அணிந்து பணியாற்ற அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும், போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். முன்னதாக ஆலோசனை கூட்டத்துக்கு வருகை தந்த போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசங்கள் அணிந்தும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
0 Comments