குமரி மண்ணின் மகள் தமிழிசை!

குமரி மண்ணின் மகள் தமிழிசை!

in News / Local

தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குமாரி மண்ணின் மகளான தமிழிசை சவுந்திரராஜன் மருத்துவர் முதல் ஆளுநர் வரை கடந்து வந்த பாதையில் கடின உழைப்பும், திறமையும் இருந்தது என்பதை யாராலும் இம்மியளவும் மறுக்க முடியாது.

தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் 1961-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.

அவரது தந்தை குமரி அனந்தன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார். தமிழிசை சவுந்திரராஜன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இதையடுத்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம் படித்தார்.மேலும் இவர் கனடாவில் சோனாலஜி மற்றும் எஃப்இடி தெரபி பயின்றுள்ளார்.

கனடாவுக்கு செல்வதற்கு முன்னர் தமிழிசை ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். அது போல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆலோசகராக இருந்தார்.

இவரது கணவர் சவுந்திரராஜனும் மருத்துவர். இவர் சவீதா பல்கலைக்கழகத்தில் சிறுநீரகவியல் நிபுணராக உள்ளார். அரசியல் குடும்பத்தில் பிறந்ததால் தமிழிசைக்கு சிறுவயது முதலே அரசியலில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தண்டை மற்றும் சித்தப்பா எச் வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் தமிழிசைக்கு பாஜகவின் சித்தாந்தம் பிடித்து போகவே அவர் பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல்வாதியானார். இதையடுத்து 1999-ஆம் ஆண்டு தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அது போல் கடந்த 2001-ஆம் ஆண்டு மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2007-ஆம் ஆண்டு மாநில பொதுச் செயலாளராகவும் 2010-ஆம் ஆண்டு மாநில பாஜக துணை தலைவராகவும் பின்னர் கடந்த 2013-ஆம் ஆண்டு தேசிய செயலாளராகவும் பதவி உயர்வுகளை பெற்றார்.

இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அப்பதவிக்கு அவரே மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை தோல்வியை தழுவினார். கடும் உழைப்பாளியான தமிழிசைக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியை பாஜக அளித்துள்ளது. பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அயராது பாடுபட்டுளார் தமிழிசை.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசையை மனதார வாழ்த்துவோம்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top