ருசியான குமரி மாவட்ட புளி!

ருசியான குமரி மாவட்ட புளி!

in News / Local

பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். ஆறு சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான். அதில், புளிப்புச் சுவைக்காக உணவில் நாம் பயன்படுத்துவது புளி தான். அன்றாட உணவுகளில் சுவை கூட்டுவதில் புளிக்கு முக்கிய பங்குண்டு. தேவை அதிகமிருப்பதால், பல மாவட்டங்களில் தனிப்பயிராகவே ஏக்கர் கணக்கில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. மற்றபடி கிராமப்புறங்களில் வீடுகள் ,தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

இன்று நாம் எல்லோரும் சமையலில் பயன்படுத்தும் புளி, ஒரு காலத்தில் நம் நாட்டில் பயிரிடப்படவில்லை. மிளகாய் வற்றல், நிலக்கடலை போன்று இந்தப் புளியும் வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்த ஒன்று. காலப்போக்கில் நம் நாட்டிலேயே பயிரிடப்பட்டு இன்று நம் நாட்டுப் பொருளாகிவிட்டது. இந்தப் புளி நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பாக நாம் ஒரு புளியைப் பயன்படுத்தினோம், அதுதான் பழம்புளி. புதிய புளி வந்ததும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அந்தப்புளிக்கு பழம்புளி என்ற பெயர் வந்தது. குணபாட நூற்கள் கூறுவது போல் பழம்புளி என்றால் பழமை ஆகிவிட்ட அல்லது நாட்பட்ட சாதாரண புளி என்பது தவறு. பழம் புளி என்பது இன்றும் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் கிடைக்கும் கோடம்புளியே தமிழ் மருத்துவம் கூறும் பழம்புளி. தாவரவியல்படி இப்புளி கார்சினியா கம்போசியா என்ற மரத்திலிருந்து பெறப்படுகிறது. மேலே குறிப்பிட்ட இடங்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பழம்புளி என்று கேட்டால் இந்த கோடம் புளியையேத் தருவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பண்டை காலங்களில் பொதுமக்கள் ஆர்வமாக புளிய மரங்களை நட்டனர்.
புளியமரங்கள் ஏப்ரல் மாத இறுதியில் பூ பூக்க தொடங்கும். பின் பூக்கள் காயாகி தை மாத குளிரில் பழுக்க தொடங்கும். மாசி மாதம் பழமாகும். பின் புளியை பறித்து, வெளிப்பகுதியை பொதிந்திருக்கும் தோடை உடைத்து, கொட்டை அகற்றி, காய வைத்து பக்குவப்படுத்தி தரமான புளியாக கடைகளில் விற்பனை செய்து வந்தனர். காலச்சூழ்நிலை மாற நிலங்களை ஆக்ரமித்து கொண்டிருந்த புளியமரங்கள் முறிக்கப்பட்டது. இதனால் புளியமரங்கள் குறையத்துவங்கியது. மேலும் முந்தைய காலங்களில் புளியமரங்களில் ஏறுவதற்கு ஆட்கள் இருந்தனர். தற்போது புளியமரம் ஏறுவதற்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது.
இந்தியாவிலே மிகுதியான புளிப்புத்தன்மை உடைய புளி குமரி மாவட்டத்தில் கிடைக்கும் புளியாகும்.
குமரியில் விளையும் புளி சமையலுக்கு பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். எனவே அனைவரும் விரும்பும் புளியாக குமரிப்புளி உள்ளது. தற்போது குமரிப்புளி ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் கம்பம், ஆந்திராவில் உள்ள புளி விலை குறைவு.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top