மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதல்; கணவன்-மனைவி பலி டிரைவர் கைது

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதல்; கணவன்-மனைவி பலி டிரைவர் கைது

in News / Local

முப்பந்தல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கனிஞ்சாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 29), டெம்போ டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி (22). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமாகி 6 வருடமாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மகாலட்சுமியின் சொந்த ஊராகும். அங்கு கோவில் கொடைவிழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மகாலட்சுமி தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு நாங்குநேரிக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர்.

இந்தநிலையில் நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் முப்பந்தல் மூன்று கண் பாலம் அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அதே சமயத்தில் நாகர்கோவிலில் வாழை இலைகளை இறக்கி விட்டு ஒரு டெம்போ நெல்லை நோக்கி சென்றது. அப்போது ரதீஷ்குமார் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது டெம்போ எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரதீஷ்குமாரும், மகாலட்சுமியும் தூக்கி வீசப்பட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர்.

இதில் ரதீஷ்குமார் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மகாலட்சுமி உயிருக்காக போராடினார். இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதே நேரத்தில், அந்த வழியாக குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் காரில் நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். விபத்தை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி போலீசாருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்.

பின்னர் மகாலட்சுமியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையே விபத்துக்குள்ளான டெம்போவும் சாலையோரத்தில் கவிழ்ந்தது. டெம்போவை ஓட்டிய திசையன்விளை அந்தோணியார்புரத்தை சேர்ந்த ஜெயசீசஸ் காயமின்றி உயிர் தப்பினார்.

தொடர்ந்து சதீஷ்குமார், மகாலட்சுமியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவர் ஜெயசீசஸை கைது செய்தனர்.

காதல் திருமணம் செய்த தம்பதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top