நாகர்கோவிலில் வீட்டை ஜப்தி செய்ய முயன்ற போது, அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

நாகர்கோவிலில் வீட்டை ஜப்தி செய்ய முயன்ற போது, அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

in News / Local

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கீரிவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை. அப்டா மார்க்கெட் முன்னாள் தலைவர். இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு நாகர்கோவில் மணிகட்டி பொட்டல் அனந்தபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் முருகேசன் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவருடைய மனைவி புகழேந்தி.

செல்லத்துரை, மணிகட்டி பொட்டல் அனந்தபுரத்தில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ஒரு தனியார் வங்கியில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவர் முறையாக செலுத்தவில்லை. இதனால் பலமுறை வங்கி சார்பில் எச்சரிக்கை விடுத்தும் செல்லத்துரை பணம் கட்டவில்லை. இதனால் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கி அதிகாரிகள் அவருக்கு நோட்டீசு அனுப்பினர்.

இதனையடுத்து நேற்று முன் தினம் காலை 11 மணியளவில் வீட்டை ஜப்தி செய்வதற்காக வங்கி அதிகாரிகள் அனந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு சென்றனர். பாதுகாப்புக்காக சுசீந்திரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும், வாடகை வீட்டில் குடியிருந்த முருகேசனும், அவருடைய மனைவி புகழேந்தியும் வீட்டை உள்ளிருந்து பூட்டினர்.

வீட்டை ஜப்தி செய்தால், இங்கேயே தீக்குளித்து விடுவோம் என்று தம்பதி மிரட்டினர். மேலும் தங்களுடைய உடல் மீது மண்எண்ணெயை ஊற்றினர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே தம்பதி வேறு ஏதும் விபரீத செயலில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களிடம் ஜன்னல் வழியாக பேச்சுவார்த்தை நடத்தினர். வீட்டின் உரிமையாளரை அழைத்து வந்தால் தான் வெளியே வருவோம் என்று தொடர்ந்து கூறியபடி இருந்தனர். இதற்கிடையே தீயணைப்பு துறையினரும் அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த முருகேசன், பூட்டிய வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது, வீட்டின் உரிமையாளர் செல்லத்துரை எனக்கு இந்த வீட்டை எழுதி கொடுக்க லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். இந்த வீடு என்னுடையது. ஆனால் செல்லத்துரை வங்கியில் வாங்கிய கடனுக்கு பணம் கட்டாததால் வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வந்துள்ளனர். அவருடைய இந்த மோசடியால், நான் லட்சக்கணக்கான பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே செல்லத்துரையை இங்கே கொண்டு வந்து தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நான் உயிரை மாய்த்து கொள்வேன் என்று முருகேசன் தெரிவித்தார். மேலும் மற்றொரு முறையும் முருகேசன் திடீரென தன்னுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் செல்லத்துரையிடம் பேசி 3 நாட்களுக்குள் உங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண முயல வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஜப்தி நடவடிக்கை தொடரும் என்று முருகேசனுக்கு அதிகாரிகள் கெடு விதித்தனர். இதனையடுத்து ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டு வங்கி அதிகாரிகள் கலைந்து சென்றனர். வீட்டை ஜப்தி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top