நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய தாள்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாடாளுமன்ற தொகுதி வாரியாகவும், சட்டசபை தொகுதிகளின் வாரியாகவும், வாக்குச்சாவடிகள் வாரியாகவும் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய தாள்கள் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி சட்டசபை தொகுதி வாரியாக நடந்து வருகிறது. நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இதே போல் கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கு கல்குளம் தாலுகா அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதிக்கு பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதிக்கு குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், கிள்ளியூர் தொகுதிக்கு கிள்ளியூர் தாலுகா அலுவலகத்திலும் நாடாளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய தாள்கள் பொருத்தும் பணி நடந்தது.
இதற்காக பெல் நிறுவன என்ஜினீயர்கள் 24 பேர் குமரி வந்துள்ளனர். அவர்கள் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரிந்து சென்று தாள் பொருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுடன் ஒவ்வொரு தொகுதியிலும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் என 100 பேர் இந்த பணிகளை மேற்கொள்கிறார்கள்.
சில வாக்குச்சாவடிகளில் கண்பார்வைற்றவர்கள் உள்ளனர். அவர்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்க வசதியாக கண்பார்வையற்றவர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் பிரெயிலி முறையில் சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயர் அருகில் எண்கள் வரிசையாக குறிப்பிடப்பட்டுள்ளன.
கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அந்த எண்களை தடவிப்பார்த்து அவர்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாகர்கோவிலில் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கண்பார்வையற்றவர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பிரெயிலி முறையில் வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய தாள் இணைக்கும் பணியையும், பிற வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குப்பதிவு எந்திரங்களில் தாள் இணைக்கும் பணியையும் கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.
அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், உதவி கலெக்டர் (பயிற்சி) ரிஷாப் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் வேறு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் தாள் இணைக்கும் பணி நடந்ததையும் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
0 Comments