குமரியில் இன்று திருக்கார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது

குமரியில் இன்று திருக்கார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது

in News / Local

திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு வீடுகளின் வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டும், அகல் விளக்குகள் ஏற்றியும் கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாடுகின்றனர். மேலும் பெண்கள் வீட்டு முற்றத்தில் தட்டில் பூ வைத்து நடுவே குத்துவிளக்கேற்றுகின்றனர். மேலும் கொழுக்கட்டை மற்றும் அப்பம் தயார் செய்து கடவுளுக்கு படைக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருக்கார்த்திகை பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று கன்னியாகுமரி அருகே பொற்றையடி வைகுண்டபதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி மருந்துவாழ்மலையில் உள்ள பரமார்த்தலிங்கபுரம் சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அன்னதானம் போன்றவை நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறை பகுதியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி கிருஷ்ணன் கோயில், பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

நாகர்கோவில் நாகராஜா கோயில், அழகம்மன் கோயில், கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கொழுக்கட்டை, தெரளி போன்றவை செய்வதற்கான இலைகள், பனை ஓலைகள் போன்றவை நாகர்கோவிலில் விற்பனைக்கு குவிந்துள்ளன. நேற்று முதல் இவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு கட்டு தெரளி இலை 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை போன்று பனை ஓலையும், 20 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top