கர்நாடக போலீஸை 18 கி.மீ விரட்டிய தமிழக போலீஸ் - காருக்குள் முருகன், 12 கிலோ தங்க நகை!

கர்நாடக போலீஸை 18 கி.மீ விரட்டிய தமிழக போலீஸ் - காருக்குள் முருகன், 12 கிலோ தங்க நகை!

in News / Local

கர்நாடகப் பதிவு எண் கொண்ட ஒரு வாகனத்தைத் தடுத்து நிறுத்தும்படி கடந்த 12-ம் தேதி பெரம்பலூர் எஸ்.பி நிஷா பார்த்திபனிடம் இருந்து வந்த உத்தரவின்பேரில் போலீஸார் அலர்ட் ஆனார்கள்.

அடுத்த சில மணித்துளிகளில், `அந்த பதிவு எண் கொண்ட கார் பெரம்பலூர் மாவட்டம் ஆத்தூர் சாலையில் வருகிறது' என உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து, பெரம்பலூர் நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் வாகன ஓட்டுநர் பச்சமுத்து, ஏட்டு செல்வராஜ் சகிதமாக எஸ்.ஐ. ரகுபதி காத்திருந்தார்.

பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி மையம் அருகே நின்றுகொண்டிருக்க, அந்த வழியே வந்த KA 02 AC5109 என்கிற இனோவா காரும், அதைப் பின்தொடர்ந்து `பிரஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டிய இன்னொரு காரும் அதிவேகமாகக் கடந்தன. கார்களை நிறுத்துமாறு எஸ்.ஐ ரகுபதி சிக்னல் கொடுத்தும், அதைப் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் பறந்தன அந்த இரண்டு கார்களும்.

இதையடுத்து, எஸ்.ஐ ரகுபதி தலைமையிலான காவலர்கள், அந்த கார்களைப் பின்தொடர்ந்து விரைந்தனர். முடிவில், அந்த 2 கார்களும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே நின்றன. காரில் இருந்து இறங்கியவர்கள், ` நாங்கள் பெங்களூரு போலீஸார், விசாரணைக்காகத் திருச்சி வந்துவிட்டு பெங்களூரு செல்கிறோம்' எனக் கூறியுள்ளனர்.

இந்தப் பதிலால் திருப்தியடையாத காவலர் பச்சமுத்து, `அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உங்கள் காரை நிறுத்தும்படி எஸ்.பி உத்தரவு போட்டிருக்கிறார். அவர் வரும் வரையில் இங்கேயே இருங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதையடுத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸாரின் செயலால் கோபமடைந்த பெங்களூரு போலீஸார், `நாங்கள் உடனடியாக போக வேண்டும். வழிவிடுங்கள்' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனிருந்த எஸ்.ஐ ரகுபதியும், பெங்களூரு போலீஸாருக்கு நடந்ததை விளக்கிக் கூறினார்.

அவற்றைக் காதில் வாங்காத கர்நாடக போலீஸார், `எங்களை விடுங்கள்' என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில், `சரி.. இங்கு வேண்டாம். ஊர் எல்லையைத் தாண்டி நிற்கிறோம்' எனக் கூறி காரை எடுத்துள்ளனர். அதைப்பார்த்த காவலர் பச்சமுத்து, `நீங்கள் போகக் கூடாது' எனக் கூறி அவர்களைத் தடுத்துள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த கர்நாடக போலீஸார், காவலர் பச்சமுத்துவை மிரட்டியதுடன், அவரைச் செல்போனிலும் படம் பிடித்தனர். அப்போது எஸ்.ஐ ரகுபதி, காவலர்கள் பச்சமுத்து, செல்வராஜ் ஆகியோர் சளைக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். உடனே, `உங்கள் அதிகாரிகள் வரும்வரை காத்திருக்கிறோம்' எனச் சொல்லிக்கொண்டே கர்நாடக போலீஸார் திடீரென காரை எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து, எஸ்.ஐ ரகுபதி மீண்டும் அவர்களை காரில் விரட்டினார். காவலர் பச்சமுத்து ஓட்டிவந்த காரை, பெங்களூரூ போலீஸார் விபத்து ஏற்படுத்தும் வகையில் இடிப்பதற்கு முயன்றனர். சுதாரித்துக்கொண்ட காவலர் பச்சமுத்து, அந்த வாகனங்களை வெங்கனூர் கிராமம் அருகில் மடக்கிப் பிடித்தார். இதையடுத்து, டி.எஸ்.பி கோபால்ராஜ், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்தனர். பின்னர் பெங்களூரு போலீஸார் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் பெரம்பலூர் எஸ்.பி நிஷா பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், கர்நாடக போலீஸாரின் காரில் கொள்ளையன் முருகனும், 12 கிலோ தங்கநகைகளும் இருந்துள்ளது. அந்த நகைகள், லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் சம்பந்தப்பட்ட நகைகள் என்றும், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை, சத்தமில்லாமல், திருச்சிக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளைக் கர்நாடகாவுக்கு எடுத்துச் சென்றதும், நகைகளைக் கொண்டுபோகும்போது வழித்தடத்தை மாற்றி, பெரம்பலூர்-ஆத்தூர் வழியாக சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கர்நாடக போலீஸார், `பொம்மனஹல்லி வழக்குக்காக முருகனை கஸ்டடி எடுத்தோம், அந்தவகையில் திருச்சிக்கு முருகனை அழைத்துவந்து நகைகளை எடுத்தோம். அந்த நகைகளை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, திருச்சி தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைப்போம்' என எழுதிக்கொடுத்துவிட்டு, கிளம்பிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்க நகைகளை திருச்சி போலீஸாரும், கர்நாடக போலீஸாரும் எடுத்ததாகத் தகவல் வெளியானது.

முருகனிடம் விசாரணை நடத்திய போலீஸார், அடுத்தநாள், மதுரை வாடிப்பட்டி கணேசனைக் கைது செய்ததுடன், 6 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி நடைபெற்ற திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் 6 கோடி மதிப்பிலான நகைகளை முருகன், சுரேஷ், கணேசன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.

உயிரைப் பணயம் வைத்து 18 கிலோமீட்டர் கர்நாடக போலீஸாரின் வாகனங்களை விரட்டிப் பிடித்த பெரம்பலூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்களின் பணி முக்கியமானது. கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் கர்நாடக போலீஸார் 12 கிலோ தங்க நகைகளுடன் சென்றிருப்பார்கள் என்கின்றனர் பெரம்பலூர் போலீஸார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top